செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சேறு பூசியவர்களுக்கு பதில் வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய கட்சிகள் எனக் கூறுபவர்கள் தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சிறு பூசல்களை மேற்கொண்டார்கள் தற்போதும் மேற்கொண்டு வருகிறார்கள்.அவர்களுடைய அரசியலைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் தடுப்பது கவலை அளிக்கிறது.தற்போது செம்மணி மனிதப் புதைக்குழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் பல நூறு எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றன.செம்மணி புதைகுழி விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியையும் இணைத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அது சளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது எங்கள் மீது பழி போட்ட சக தமிழ் கட்சிகளுக்கு செம்மணி விவகாரத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்த கருத்தை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.அதாவது தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் செம்மணியுடன் தொடர்புடைய பல இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் உண்மையை கூறுவேன் என்றார் அவருடைய கருத்துக்களில் ஈபிடிபி தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை.அவருடைய அந்தக் கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சக தமிழ் கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கிறது.அதேபோன்று மண்டதீவிலும் மனிதப் புதைக்குழி இருப்பதாகவும் அதற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் தொடர்பாக அண்மையில் ஒரு கருத்து வெளிவந்தது.அது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவுக்கு கடிதம் எழுதினேன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையை ஆராயுமாறு தெரிவித்திருக்கிறேன் என்றார்.