திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெம்பா' உட்பட மூன்று சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம்(14.7.2026)மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, முக்கிய சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும் இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.