பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 13 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. தனித்து போட்டியிட்டிருந்தால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வெற்றிகளின் பிரதான பங்காளியாக இருக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் எந்த நேரத்திலும் காலை வாரி விடலாம் என்பதால், தற்போதே அவர்களை வெளியேற்றுவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவராலும் செயற்பட முடியாது. அப்படி செய்யும் தேவை இருந்தால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய புலனாய்வு சேவை பல முறை அறிவித்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்காது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேவாலயங்களில் கொல்லப்பட்டனர். முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போதே இந்த சம்பவம் நடந்தது.
இதனால், தற்போதைய அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் தார்மீக உரிமை அவருக்கு கிடையாது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.