
பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என யானைகள் அடையாளப்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், ‘மதம்’ பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. இந்தியாவின் தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும். இந்தியாவின் வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை. யானையைப் பற்றிய மேலும் சில தகவல்கள்;
- நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் நைல் நதிக்கரைகளில் மெயெரித்திரியம் என்ற விலங்கு தோன்றியது. அது ஒரு பன்றியின் அளவாக இருந்தது. அதில் இருந்து இன்றைய யானைகள் உருவாகியதாக உயிரியலாளர்கள் கூறுகின்றார்கள்.
- பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை.
- யானை சுறுசுறுப்பானது அத்துடன் பெருந்தன்மை மிக்கது.
- யானையிடம் நீங்கள் அன்பு காட்டினால் அதனை எப்போதும் அது மறப்பதில்லை. பத்து, இருபது வருடங்கள் சந்திக்காமல் இருந்தாலும் அது உங்களை அடையாளங் கண்டு சந்தோஷப்படும்.
- மனிதனைப் போலவே யானைகளும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றன.
- யானை 22 மாதங்கள் கருவைச் சுமக்கிறது.
- மணிக்கு நாற்பது கிலோமீற்றர் வேகத்தில் யானைகளால் ஓட முடியும்.
- யானைகள் தமது தந்தங்களைக் கொண்டு பல தொழில்களைச் செய்கின்றன. மண்ணைத் தோண்டுகின்றன. எதிரிகளுடன் சண்டை இடுகின்றன. கனமான பொருட்களைத் தூக்கிச் செல்கின்றன. பெரிய நீர்நிலைகளைக் கடந்து செல்லும் போது தந்தங்களில் தமது குட்டிகளைச் சுமந்து செல்கின்றன. தந்தங்கள் சில சமயங்களில் உடைந்துவிடும். அதனால் யானைகளுக்கு பாதகம் இல்லை.
- யானைக்குத் தும்பிக்கை தான் முக்கியமானது. இதன் மூலமே யானைகள் சுவாசிக்கின்றன. நீரை உறிஞ்சி வாய்க்குள் பீச்சிக் குடிக்கின்றன. தழைகளையும், குழைகளையும் ஒடித்து வாயில் போட்டுக் கொள்ளுகின்றன. அது மட்டுமல்ல சேற்றை வாரித் தமது முதுகில் போட்டுக்கொள்ளவும் தும்பிக்கைகளைப் பயன்படுத்துகின்றன.
- யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. முனகல்கள் மூலமாகவும், உரக்கப் பிளிறுதல் மற்றும் பலவித ஓசைகள் மூலமாகவும் செய்திகளைப் பரிமாற்றிக் கொள்கின்றன.
- தாய் யானை தன் குட்டியைக் கொஞ்சுவது அற்புதமான காட்சியாக இருக்கும். உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் போது தும்பிக்கைகளைக் கோர்த்துக் கொண்டு குரல் எழுப்புகின்றன.
- நோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும், நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.
- உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளிக் குதிக்க முடியாது.
- தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும்.
- யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும்.
- ஆப்பிரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாகச் சாப்பிடாது.
- நன்கு வளர்ந்த ஆப்பிரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும்.
- யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும்.
- ஆப்பிரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும், பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்தச் சகதி படிமம் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிக் கடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக் கொள்ளும்.
- யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.
- யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
- சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும்.
- யானையின் தகவல் தொடர்பு பூனையைப் போன்றே இருக்கும்.
- ஒரு யானைக் கூட்டத்தில் ஒன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான்.
- யானைக் கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.
- நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூடப் போடும்.
- யானையானது 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை என்றால் உயிரை விட்டுவிடும்.
- யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மொத்தத் தசைகள் 640 தான்.
- தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானை.
- ஆண் யானை பருவ வயதை (15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும்.
- யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாகச் சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான்.
- யானை உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக்கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ. வரை சுற்றி வரும்.
- யானை ஒன்றுக்கு தினமும் 200 முதல் 250 கிலோ புற்கள் தேவை. இதில் 45 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும். இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.
- யானையின் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.
- யானைகள் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை.
- யானையானது வறட்சிக் காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.
- யானை கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்துச் சாப்பிடும்.
- யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங்களில் சுரக்காததால், உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.
- ஆண் யானைக்குக் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைத்தான் ‘மதம்’ என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும். மற்ற ஆண் யானைகளைப் பிடிக்காது. பெண் யானையுடன் சேரத் துடிக்கும். அரை மணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும்.
- பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை அழுத்திக் குத்தும் போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.