இந்தியாவின் டெல்லி மாநகரில் மசாலா தோசை விற்று நாள் ஒன்றுக்கு 60,000 ரூபாய் வருமானமாக ஈட்டி வருகிறார் கேசவன் குட்டி.
புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்குச் சொந்தமான ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கடையில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது “குட்டீஸ் கஃபே”.
அந்த காலத்தில் 5,000 ரூபாய் முதலீட்டில் தன்னுடைய தொழிலை தொடங்கியுள்ளார்.
2.50 ரூபாயில் தொடங்கிய தோசையின் விலை தற்போது 50 ரூபாயில் வந்து நிற்கிறது.
பரபரப்பான சாலைக்கு நடுவே ஆவி பறக்கும் குட்டீஸ் கஃபே-யை தினமும் விசிட் அடிப்பவர்கள் ஏராளம்.
இட்லி, வடைகள், மொறு, மொறு தோசைகள், நெய் சொட்ட, சொட்ட இனிக்கும் ரவா கேசரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
தொடக்கத்தில் கேசவன் குட்டி மட்டுமே சமையல் முதல் பரிமாறுதல் வரை அனைத்து வேலைகளையும் தனி ஒரு ஆளாக செய்து வந்துள்ளார்.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புன்னகைத்த முகத்துடன் தற்போது இந்த நிலையை எட்டியுள்ளார்.
தொடர்ந்து Mall ஒன்றில் ரெஸ்டாரண்ட் ஒன்றையும் தொடங்கியுள்ள குட்டிக்கு அன்றைய தினம் மிக மகிழ்ச்சிகரமாக அமைந்ததாம்.
தன்னுடைய கடைகளுக்கு தேவையான மசாலாக்களை தாங்களே தயாரித்துக் கொள்வார்களாம்.
விலை குறைவாக இருந்தாலும் சரி, எப்போதும் உணவின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்கிறார் குட்டி.
குட்டியின் கைப்பக்குவத்துக்கு ஏழை மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அடிமையாகி போனது தான் உண்மை.

பலரும் தங்கள் காரில் அமர்ந்தபடியே, தோசையை வாங்கி வந்து ரசித்து ருசித்து சாப்பிடுவார்களாம்.
என்னதான் தன்னுடைய தொழிலில் வளர்ச்சி கண்டாலும், தான் வளர்ந்த விதத்தையும், சொந்த ஊரையும் மறக்காத குட்டி, மாதந்தோறும் தன்னுடைய ஊருக்கு சென்று வருவது வழக்கமாம்.
2-3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து விவசாயத்தையும் கவனித்துவிட்டு உற்றார்- உறவினர்களையும் பார்த்து அகம் மகிழ்ந்து போவாராம் குட்டி.