Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் பெரும் அச்சத்தை உருவாக்கியிருந்த நிலையில், அந்த வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவோ தொடர்ந்து ஆறுதலளிக்கும் செய்திகளையே அளித்து வந்தது.
முதலில் பிரித்தானிய தரப்பு அறிவியலாளர்கள் அதை ஏற்க மறுத்த நிலையில், கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இதே காலகட்டத்தில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, Omicron வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலிலும், இந்த ஆண்டு கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் அதிகம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரித்தானியா தரப்பிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தீவிரம் குறைந்ததுதான் என்ற நம்பிக்கை உருவாகத் தொடங்கியது.
இந்நிலையில், மற்றொரு ஆறுதலளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, Omicron வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக தெரியவந்ததையடுத்து, மருத்துவ அமைப்பான NHS கடும் அழுத்தத்திற்குள்ளாகலாம், நோயாளிகள் அனுமதிக்கப்பட, படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற ஒரு அச்சம் ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால், கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலகட்டம் குறைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
விவரமாகக் கூறினால், பிரித்தானியாவில், மூன்றாவது கொரோனா அலையின்போது, அதாவது கடந்த மே மாதம் வாக்கில், 80 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பொதுவாக 11 நாட்கள் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால், டிசம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, அதாவது, Omicron அலை பரவத் துவங்கியதிலிருந்து, அதே 80 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள், வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல, 50 முதல் 69 வயதுடைய கொரோனா நோயாளிகள், மற்றும் 70 முதல் 79 வயது வரையுள்ள கொரோனா நோயாளிகள் என பலதரப்பட்ட வயது கொரோனா நோயாளிகளும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலகட்டம் ஐந்து நாட்களாக குறைந்துள்ளது.
இந்த செய்தி, NHSக்கு ஒரு பெரும் ஆறுதலளிக்கும் செய்தியாக உள்ளது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ள அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படுவதற்கு வசதியாக படுக்கைகள் கிடைப்பதுடன், மருத்துவ அமைப்பு அதிக அழுத்தத்திற்குள்ளாகும் அபாயமும் குறைந்துள்ளது.
இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் 20 மடங்கு குறைந்துள்ளது என்பதாகும்.
கொரோனா உச்சத்திலிருந்தபோது 3 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது, 0.15 சதவிகிதத்தினர் மட்டுமே உயிரிழக்கும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.