பிரித்தானியாவின் கொரோனா தொற்றுநிலவரங்கள் அங்கு தொடர்ந்தும் நெருக்கடிகளை உருவாக்கி வந்தாலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள், அவர்கள் இரண்டு கொரோனா தடுப்பூசியைப்பெற்றிருந்தால் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களாக இருந்தால் அவ்வாறாவர்களுக்கு பயணத்திற்கு முன்னரான தொற்றுப்பரிசோதனை அவசியம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், வருகைக்குப் பிந்தைய சோதனை கட்டாயமாக, பி.சி.ஆர். சோதனைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அன்டிஜென் எனப்படும் கட்டணம் குறைந்த சோதனையாக அமையமுடியும். ஆனால் இந்த விரைவான சோதனைகளில் முடிவுகள் பாதகமாக அமைந்தால் அது தேசிய சுகாதார சேவை மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இங்கிலாந்து பிராந்தியத்தின் தேசிய சுகாதார சேவையில் அழுத்தமான நிலை தொடர்கிறது.

சுகாதார சேவையில பணியாற்றும் ஊழியர்களில் அறுபது சதவீதமானோர் கொரோனா தொற்றை மையப்படுத்திய காரணங்களால் பணிக்கு சமுகமளிக்காத காரணத்தால் இந்த நிலை எழுந்துள்ளது.
இதனையடுத்து உதவிக்காக படையினரின் மருத்துவ பிரிவின் உதவி நாடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.