எழுதியவர்- பவானி ரெகு

முழுக்க முழுக்கத் தங்கத்தினாலான அழகான புத்தர் சிலை தாய்லாந்தில் இருக்கிறது. 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என்கிறன ஆராய்ச்சிகள். கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக இச்சிலைக்கு மேலே சாந்து பூசிச் சாதாரண சிலையாக்கி வைத்திருந்திருக்கிறார்கள். 200 ஆண்டுகளாக இவ்வுண்மை தெரியாமல் சாதாரணக் கொட்டகையில் சாந்தோடு இருந்திருக்கிறது சிலை.
1955 இல் சிலைக்குக் கோவிலமைத்து ஆட்கள் சேர்ந்து தூக்கியபோது தவறி வீழ்ந்த சிலையின் தலைப்பகுதி உடைந்து போக வெளிப்பட்டது ஒளியுள்ள தங்கச்சிலை. முட்டை வடிவத் தலையும் முடி சுருண்ட அமைப்பும் தொங்கும் காதுகளும், தொட்டு மூடா பாதி இமைகளுமாய், கருணை ததும்பும் கண்களோடு புத்தர் இருந்தார். ஐயாயிரத்து ஐநூறு கிலோவில் அப்படியே அமர்ந்த நிலையில் மூன்று மீட்டருக்கும் அதிக உயரத்தில் மின்னும் புத்தர் இவர். 2010 இல் இவருக்கென்று ஒரு கோவில் வாட் டிரைமிட்டில் கட்டப்பட்டது.