
இன்று சர்வதேச மனிதஉரிமைகள் தினமாகும். சகல மனிதர்களும் தமக்கான உரிமைகளோடும் கௌரவத்தோடும் வாழ்வதையே மனித உரிமைகள் தினம் வலியுறுத்துகின்றது. உணவு உடை உறையுள் என்பவற்றோடு மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும் விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அத்துடன் கலாச்சார செயற்பாடுகளில் பங்கெடுத்தல், வேலைக்கான உரிமை, கல்விக்கான உரிமை உட்பட சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பேச்சு சுதந்திரம். எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்தோடு அன்றாடம் அல்லல்படும் ஒரு நிலையே எமது நாட்டின் பலருக்கு வாய்த்திருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியின் அடிப்படை ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. அதுவே சமுதாய வளர்ச்சியாகவும் பின்னர் நாடளாவிய முன்னேற்றமாகவும் பரிணமிக்கிறது.
பல கிராமப்புறங்களில் மட்டுமன்றி நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் சிலவேளைகளில் கூட பசியற்ற ஒரு நாளை நகர்த்துவதில் பெரும் சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர். கொவிட் தொற்று பரவலான ஒரு காரணமாக இருப்பினும் பொருட்களின் விலையேற்றம், உள்ளுர் உற்பத்திகளின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட மந்த நிலை போன்றவையும் மிக முக்கிய காரணங்களாகும்.
உயர்தர கற்கைக்கு பின்னர் ஓரளவான மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர ஏனைய மாணவர்களின் நிலை என்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. சுயதொழில் முனைவோராக தம்மை வளப்படுத்த முனைகின்ற பலருக்கு முதலீடு என்பது பாரிய சிக்கலான ஒன்றாக உள்ளது.
உண்மையில் இளம் தொழில்முனைவோரை வழிகாட்டி உருவாக்கும்போது குடும்பம், சமுதாயம், தேசம் என அத்தனையும் வளப்படுத்தப்படும். புலம்பெயர் உறவுகளும் அரசாங்கமும் இவ்விடயத்தில் கவனமெடுத்து செயற்படும்போது அதீத பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கிக்கடன்கள் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறான முயற்சியாளர்கள் கூட மனச்சோர்வினால் சிந்தனையில் இறங்குமுகம் காண்பதை அவதானிக்க முடிகிறது. படித்தவர்கள் கூட தத்தமது வாழ்வாதாரங்களைப்பற்றி மட்டும் சிந்திப்பதால் சமுதாய வளர்ச்சி என்பது மிக அடிநிலைக்குச் சென்றுவிடுகிறது.
மனித உரிமை என்பது என்ன? வாழ்தலுக்கான அடிப்படை எவை?
பொருளாதாரம் முன்னேற்றம் கண்டால் மட்டுமே மனித உரிமைகள் கூட சரியான முறையில் பேணப்படும். வறுமை தலைதூக்கும் போது திருட்டு மிக அதிகமாகவே நடைபெறும். கிராமங்கள் தோறும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதும் புலம்பெயர் உறவுகள் தாய் நாட்டில் முதலீடுகளைச் செய்வதும் இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கியமானதொரு தேவையாகும். தொழிற்துறைகளை உருவாக்குங்கள் வருங்கால சந்ததியின் சிந்தனைகளில் தேடலையும் உழைப்பையம் பதியச் செய்யுங்கள். இளையசமுதாயம் சட்டவிரோதமான காரியங்களில் இறங்குவதற்கு ஏழ்மையும் இயலாமையம்தான் காரணமாகும். இலட்சியத்தில் உயர்வு கிட்டும்போது நிச்சயமாக ஏனைய அனைத்து கசடுகளும் மனதைவிட்டு மறைந்துபோவதற்கு சாத்தியங்கள் அதிகம் உள்ளன. பாலியல் வன்புணர்வு வீட்டுவன்முறை போன்ற குற்றச்செயல்களும் விவாகரத்து போன்ற சமூக உடைவுகளும் குறைந்துவிடும்.
‘தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் பாரதி. தோழனின் பசி கண்டு பாரதியின் உள்ளத்தில் பீறிட்ட வரிகள் இவை. இன்று தாயகத்திலும் பல வயிறுகள் இப்படி பட்டினியால்தான் வாடிக்கொண்டிருக்கிறது. அன்பு உறவுகளே உள்ளம் திறந்து உதயத்திற்கு வழி செய்யுங்கள்…
கட்டுரை ஆக்கம் – கோபிகை.