எழுதியவர் – முனைவர் பூபாலன்

கார்காலம் வந்ததும் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் சென்றான். தலைவி அதனை உறுதியாகப் பற்றி நிற்கிறாள். உண்மையான கார்காலம் வருகிறது. தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள். தலைவி அதனைக் கார்காலம் இல்லை எனக் கூறி மறுக்கும் பாடல் இது. தலைவிக்குத் தலைவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ஓதலாந்தையார் பாடிய பாடல் இது..
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
குறுந்தொகை:21
கொன்றைப்பூ பூத்திருக்கிறது.
வண்டுகள் மொய்க்கின்றன.
அது மகளிர் கூந்தலில் வைத்து ஒப்பனை செய்திருக்கும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன் போலக் காணப்படுகிறது.
தோழி, நீ இதனைக் கார்காலம் எனக் கூறினாலும் நான் நம்பமாட்டேன். காரணம் அவர் பொய் சொல்லமாட்டார். இது கார்காலம் ஆயின் அவர் வந்திருப்பார் அன்றோ?