கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை உலகமெங்கும் 13 கோடியே 65 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது.

29 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோரை கொன்றிருக்கிறது.தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் இரண்டாவது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உலக சுகாதார நிறுவன தலைவர் பேட்டி

இந்த தருணத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து 6 வாரங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்தது. 7 வாரங்களாக தொற்று அதிகரிப்பதை நாம் பார்க்கவில்லை. 4 வாரங்கள் கொரோனா சாவு அதிகரிக்கவில்லை.ஆனால் கடந்த வாரம், 4-வது மிக அதிகபட்ச பாதிப்புகளை கண்ட வாரமாக இருந்தது. பல ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் வைரஸ் பரவல் அதிகமாக காணப்பட்டது.

உலகளவில் இதுவரை 78 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மிகவும் வலிமை வாய்ந்த முக்கியமான உபகரணம். ஆனால் அவை மட்டுமே உபகரணம் அல்ல. இதை நாம் தொடர்ந்து கூறி வருகிறோம்.

தடுத்து நிறுத்த முடியும்….

தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது வேலை செய்யும். இதே போன்று வென்டிலேட்டர்கள், கண்காணிப்பு பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு தடம் அறிதல், தனிமைப்படுத்துதல், ஆதரவு தனிமைப்படுத்துதல், கருணையான பராமரிப்பு இவை யாவுமே கொரோனா பரவலை தடுத்து நிறுத்துவதுடன், உயிர்களைக் காக்கும்.

இது ஒரு நிலையான, ஒருங்கிணைந்த, விரிவான அணுகுமுறையை எடுத்துக்கொள்கிறது. நிரூபிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மூலம், விரைவாக பதிலளிக்கும் வலுவான அமைப்புகள் மூலம், இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும், கட்டுப்படுத்த முடியும் என்று எத்தனையோ உலக நாடுகள் காட்டியுள்ளன.

முற்றிலும் தவிர்க்கக்கூடியது…

இதன் விளைவாக கொரோனாவை அவற்றில் பல நாடுகள் வெற்றி கண்டுள்ளன. அவர்களது மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில், கச்சேரிகளில், உணவு விடுதிகளில் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.

தங்கள் குடும்பத்தினரை, நண்பர்களை பாதுகாப்பாக இருப்பதை பார்க்கிறார்கள்.முடிவில்லாத ஊரடங்கு பொதுமுடக்கத்தை உலக சுகாதார நிறுவனம் விரும்பவில்லை. சமூக, பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதையும், பயணங்களும், வர்த்தகங்களும் மீண்டும் நடைபெறுவதையும் பார்க்க விரும்புகிறோம். தற்போது பல நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன.

மக்கள் சாகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கக்கூடியதுதான்.சில நாடுகளில் பரவல் தொடர்ந்தாலும்கூட, உணவு விடுதிகள், இரவு விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சந்தைகள் திறந்துள்ளன. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதில் ஒரு பிரிவினர் முன்எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

இந்த நோய் காய்ச்சல் போல அல்ல. இளையவர்கள், ஆரோக்கியமானவர்கள் சாகிறார்கள். உயிர் பிழைத்தவர்களின் நீண்ட கால விளைவுகளை நாம் இன்னும் பூரணமாக புரிந்து கொள்ளவில்லை.

வெகுதொலைவில் உள்ளது….

லேசான பாதிப்புக்கு ஆளானவர்கள் கூட, சோர்வு, பலவீனம், மூளைச்சோர்வு, தலைசுற்றல், நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, மூட்டு வலி, மார்பு இறுக்கம் உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.இந்த பெருந்தொற்றுநோய் முடிவுக்கு வருவதில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.

ஆனால் இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் வைரஸ் பரவல் குறைந்ததும், சாவு குறைந்ததும் இந்த வைரசும், அதன் வகைகளும் தடுத்து நிறுத்த முடியும் என்பதையே காட்டுகின்றன.

பொதுசுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியால் சில மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அவர் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal