டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறமை ரிஷப் பண்ட்விற்கு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அதிரடியாக அறிவித்தார்.
ஏற்கெனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இவரின் விலகல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனையடுத்து, டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் பேசியதாவது –
இந்திய கிரிக்கெட்டை யார் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தேர்வுக் குழுவைப் பொறுத்தவரையில் இது ஒரு விவாதமாக இருக்கும்.
நீங்கள் என்னைக் கேட்டால், அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பண்டை தான் நான் பார்க்கிறேன். ஏன் என்றால், ரிக்கி பாண்டிங் விலகியதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கியப் பிறகு அவரது பேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றத்தைப் பாருங்கள்.
50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் என அபாரமான பேட்டிங் வெளிப்பட்டது அல்லவா? அதேபோல் ரிஷப் பண்டிற்கு கொடுக்கப்பட்ட பொறுப்புதான் நியூலேண்ட்ஸில் அந்த அற்புதமான சதத்தை அடிக்க தூண்டியது.
ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்டிற்கு, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறனும் உற்சாகமான அணியாக மாற்றும் திறனும் இருப்பதாக நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
