டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக முதன் முதலில் பதவியேற்ற கே.எல்.ராகுல் சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட் கோலி விலக கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பேற்றார்.

டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 11, கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதனிடையே இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை முன்னாள் கேப்டன் முகமத் அசாருதீன் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது ஒருநாள், டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்படாமலேயே நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக மாறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேப்டன்சி செய்தார். அந்த சாதனையை தற்போது 31 ஆண்டுகள் கழித்து ராகுல் செய்துள்ளார்.
பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் கேப்டன்சி சிறப்பாக செய்தால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் ஆனால் ராகுல் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.