
இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை கடற்றொழிலாளர்களையும் படகினையும் நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda ) கடற்றொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் ஆகியோர் இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
வாழைச்சேனையில் கடந்த 26 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில், அந்தமான் தீவுப்பகுதியில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இந்திய சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கலந்துரையாடலில்,
புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் சுருக்குவலை தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச மீனவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 53 பேருக்கு சுருக்கு வலை அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அதைவிட சுமார் 120 பேர் சுருக்கு வலைக்கான அனுமதிகளை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், மீன்பிடித் தொழில் முறைகள் தொடர்பாக புதிய ஒழுங்கு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதுவரையில் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின்னர் முடிவினை தெரிவிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.