தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அத்துடன் பெண் கல்வி மறுக்கப்படும், பெண்கள் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பொது இடத்திற்கு செல்ல அனுமதியில்லை என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 90-களில் தாலிபான்கள் ஆட்சியில் ஷரியத் சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் முன்னேற்றம் தடைப்பட்டது.

இந்நிலையில்தான் ஆப்கான் முதல்பெண் மேயரான சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) தாலிபான்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தான் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
27 வயதான சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முதல் பெண் மற்றும் வயதில் மிக்குறைவான இளம் மேயராக பதவி ஏற்றார். இப்போதே தாலிபான்களால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அத்துடன் இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அவர் மீது தாலிபான்கள் குற்றம் சுமத்திய நிலையில் சரிஃபாவின் தந்தை கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்டார்.