ஒரு பக்கம் அறிவியலாளர்கள் உடனடியாக புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை வலியுறுத்த, மறுபக்கம், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் ராஜினாமா செய்வதாக சக அமைச்சர்கள் மிரட்ட, இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார் அவர்.
போரிஸ் ஜான்சன் மீண்டும் முழு பொது முடக்கம் அறிவித்தார் என்றால், தாங்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தற்போது கேபினட் அமைச்சர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போரிஸ் ஜான்சனின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களான கன்சர்வேட்டிவ் கட்சியினர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் முன் போரிஸ் ஜான்சன் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முயற்சி செய்தால், கட்சியின் தலைமையிலிருந்து அவரை நீக்கக் கோரி கடிதம் எழுத இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையில், Omicron வகை கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் போரிஸ் ஜான்சன் மூன்று திட்டங்களை கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவையாவன: இங்கிலாந்தில், கட்டிடங்களுக்குள் கூடும் மக்கள் மீது விதிக்க இருக்கும் கட்டுப்பாடுகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மீது ஊரடங்கு உத்தரவு, மற்றும் உடனடி பொதுமுடக்கம் ஆகிய திட்டங்கள் ஆகும்.
ஏற்கனவே பிரெக்சிட் அமைச்சரான Lord Frost ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தற்போது மற்ற அமைச்சர்கள் சிலரும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்கடியை ஏற்படுத்த, போரிஸ் ஜான்சன் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை.


மேலும் ஐக்கிய இராச்சியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்