நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு” திட்டத்திற்கு அமைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் “ஜன சுவய” திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 34 ஆவது கட்டமாக, மெரட்டுவ –  லுனாவ வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வைத்தியசாலை உபகரணங்கள் நேற்றையதினம் வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

நாடும் மக்களும் முகங்கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கின்ற பொறுப்பு ஆட்சிபீடத்திலுள்ள அரசின் வசம் காணப்படுவதுடன் அதற்கேற்றவாறு தான் கடந்தகால அரசாங்கம் செயற்பட்டு வந்திருக்கின்றன.

இருப்பினும் எதிர்த்தரப்பினரான எம்மைப் பொறுத்தமட்டில், அதிகாரம் எமது வசமில்லாத போதிலும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி ஏற்பட்ட நாளிலிருந்து தற்போது வரை அதனைக் கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமான உதவிகளை இயலுமான வரையில் வழங்கி வருகின்றோம்.

இதுவரையான காலப்பகுதியில் சுமார் 101 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவ உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள தேவையுடைய வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றோம்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து நடைமுறையிலுள்ள கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று பலரும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றார்கள். ஆனால், நாம் எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதிலும் இதுவரையில் நடைமுறையிலிருந்த கலாசாரத்தை முழுமையாக மாற்றி, சிறந்த முன்னுதாரணமான எதிரணியாக செயற்பட்டுள்ளோம்.

நாட்டில் டொலர் மற்றும் வெளிநாட்டுக் கையிருப்புப் பிரச்சினை காணப்படுகின்றது எனவும், தற்போதைய நெருக்கடியைக் கையாள்வதற்கு பெருந்தொகை நிதியைத் திரட்டிக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுந்தரப்பு கூறுகின்றது.

ஆனால், நாம் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தாமல், எமது ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் ஊடாகத் திரட்டிக்கொண்ட நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுவது என்பதை நடைமுறைப்படுத்திக் காண்பித்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கல்வியையும் தகவல் தொழில்நுட்பத்தையும் மையப்படுத்திய அபிவிருத்திச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் ‘அதிகாரத்தை எம்மிடம் தாருங்கள், நாங்கள் இதனைச் செய்வோம்’ என்று பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கமாட்டோம். மாறாக எம்மிடம் அதிகாரம் இல்லாவிட்டாலும், நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திய எமது செயற்திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம்.

வைத்தியசாலைகளுக்கு வழங்கிய உதவிகள் போதும் என்றும், பொதுமக்களுக்கு உணவுப்பொதிகளை வழங்குமாறும் சிலர் என்னிடம் கூறுகின்றார்கள்.

உணவுப்பொதிகளை வழங்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. நான் ஆட்சிப்பீடமேறினால் நாட்டு மக்கள் பசியில் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அவர்களை வர்த்தக நிலையங்களில் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கச் செய்யமாட்டேன்.

எனது ஆட்சியில் பால்மாவைக் கொள்வனவு செய்வதற்காகத் தாய்மார் சதொச விற்பனை நிலையங்களுக்கு அலையவேண்டிய தேவையேற்படாது. அரசு அதன் நத்தார் பரிசாக ஏற்கனவே நாட்டு மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்திருக்கின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தற்போதைய அரசின் செயல் திறனற்ற பொருளாதார நிர்வாகத்தின் விளைவாக எமது நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீது அதிக சுமையைச் சுமத்தி, தமது இயலாமையை மறைத்துக்கொள்வதற்கு அரசு முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal