
டிஜிட்டல் உலகின் அசத்தல் சாதனைகளுள் ஒன்றான மெட்டாவெர்ஸ்(விர்ச்சுவல் ரியாலிட்டி) முறையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த டிஜிட்டல் திருமணத்தில் உயிரிழந்த ஒரு நபரும் கலந்துகொள்ள இருப்பது இன்னும் சுவாரசியமாகப் பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சிவலிங்கப்புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் பி.டெக் படித்த தன்னுடைய மகள் ஜனநந்தினி(23) என்பவருக்கு சென்னை ஐஐடியில் ஆராய்ச்சியளராகப் பணியாற்றிவரும் தினுஷ்(25) என்பவரோடு திருமணம் பேசி முடித்துள்ளார். இந்நிலையில் திடீரென ராமசாமி உயிரிழந்ததால் அவருடைய மகள் ஜனநந்தினி கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனால் மணமகன் தினேஷ் தன்னுடைய மாமனாருக்காக மெட்டாவெர்ஸ் திருமணத்தை முயற்சித்து இருக்கிறார்.

வரும் பிப்ரவரி 6 ஆம்தேதி நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்தின்போது மணமக்கள் தங்களது உறவினர்கள் அனைவருக்கும் ஒரு லிங்கை சேர் செய்ய இருக்கின்றனர். இந்த லிங்கை பயன்படுத்தி உறவினர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தினேஷ்- ஜனநந்தியின் திருமணத்தில் கலந்துகொள்ளலாம். மேலும் உயிரிழந்த ராமசாமியும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளப் போகிறார். இந்தப் புதுமையான திருமணத் தகவல் தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மெட்டாவெர்ஸ் என்றால் விர்ச்சுவல் ரியாலிட்டி அதாவது உண்மையில்லாத ஒரு மாய உலகத்தை உருவாக்குவது. இந்த மாய உலகத்திற்குள் செல்லும்போது ஒருவர் மற்றவருடன் பேச முடியும். விளையாட முடியும். உயிரிழந்த ஒரு நபரை விர்ச்சுவல் ரியாலிட்டியில் பழைய தோற்றத்துடன் நம்மால் பார்க்க முடியும். இத்தகைய அதிசய தொழில் நுட்பத்தைத்தான் தற்போது ஜனநந்தினிக்காக தினேஷ் முயற்சிக்க இருக்கிறார். மேலும் இந்தியாவில் முதல்முறையாக மெட்டாவெர்ஸ் முறையில் நடைபெறும் இந்தத் திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.