Description
நேரம் சரியாகtime
ரவி நடராஜன்
ஜூன் 2016
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆசிரியர் – ரவி நடராஜன் – ravinat@gmail.com
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
முன்னுரை
துல்லிய நேர அளவீடு மற்றும் விஞ்ஞானம் பற்றி ‘சொல்வனம்’ இதழில் 2013 –ல் எழுதிய கட்டுரைத் தொடர் இந்த நூல். தமிழில் விஞ்ஞானம் படிப்பவர்களுக்கு இன்றைய அணு பெளதிக முன்னேற்றங்களை எளிமையாக விளக்கும் நோக்கத்தில் எழுதப்பட்ட மின்னூல் இது.
மனித மனம் நேரத்தை சரியாக அளக்கும் தன்மையற்றது. இதற்கு பல்வேறு மொழி, பழக்கங்கள் மற்றும் மதம் போன்ற விஷயங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வரலாற்று முறைகளிலும் நேரத்தைப் பற்றிய குறிப்புகள் குழப்பமானவை. உதாரணத்திற்கு, நம்முடைய தாத்தா காலத்தில் (அதாவது 60 ஆண்டுகள் முன்பு), தட்டச்சு எந்திரத்தில், 45 வார்த்தைகள் நிமிடத்திற்கு உருவாக்கியதை சாதனையாகக் கருதினோம். இன்று லேசர் அச்சு எந்திரங்கள், 20 பக்கங்களை அதே நிமிடத்தில் உருவாக்குவதைப் பெரிதாக நினைப்பதில்லை. அன்று, தந்தி மூலம் 10 வரிச் செய்தி 1 மணி நேரத்தில் சென்றதை சாதனையாகக் கருதினோம். இன்று, அதே 1 மணி நேரத்தில், ஒரு முழு விடியோவை தரவிறக்கம் செய்து பார்ப்பதை மிகவும் தாமதம் என்று நினைக்கிறோம்.
விஞ்ஞானத்தில் இது போன்ற குழப்பத்திற்கு இடமில்லை. எப்படி நேரத்தை அளக்க முயன்றோம், இன்று எப்படி துல்லியமாக அளக்கிறோம், ஏன் இப்படி செய்ய வேண்டும், இதனால் உள்ள மற்ற பயன்கள் என்று விஞ்ஞான பூர்வமாக நேர அறிவியலை இந்த மின்னூல் எளிமையான முறையில் விளக்க முயலும்.
ஆரம்ப கால மனிதனுக்கு இரவு, பகல் என்ற மாற்றத்தை அளவிட மட்டுமே தேவை இருந்தது. விவசாயத்திற்கும், தொழுகைக்கும் பயன்பட்ட இம்முறைகள், நாளடைவில் பல்வேறு நவீனத் தேவைகளுக்காக எந்திர, மின் படிக கடிகாரங்கள் நேரத்தை துல்லியமாக அளக்கத் தொடங்கியவுடன் அதன் பயன்பாடுகளும் வளரத் தொடங்கின. அமெரிக்க விஞ்ஞானி டேவிட் வைன்லேண்ட், ஒரு பேட்டியில் இப்படிச் சொன்னார், “கடந்த 10 நூற்றாண்டுகளாக, நேரத்தின் துல்லிய அளவீடல் கூடக் கூட, புதிய பயன்பாடுகள் தோன்றிக் கொண்டே வந்துள்ளன. அடுத்த துல்லிய அளவீட்டிற்காக எந்த பயன்பாடு காத்திருக்கிறதோ!”.
இன்று உலகெங்கும் கார் ஓட்டுபவர்கள் சார்ந்திருக்கும் ஜி.பி.எஸ்., அணு கடிகார நேரத் துல்லிய அளவீட்டின் ஒரு மிக முக்கிய பயன்பாடு. இன்றைய உச்சக் குளிர் அணு பெளதிக முயற்சிகள் இன்னும் துல்லிய நேர அளவீட்டிற்காக பல சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஒரு புறம், நேரத் துல்லிய அளவீட்டினைத் தேடும் அதே முயற்சிகள் நாளைய குவாண்டம் கணினிகளை உருவாக்கும் முயற்சிகளாகவும் மாறுகின்ற வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இரண்டு துறைக்கும் அடிப்படைத் தேவை உச்சக் குளிர் அணு பெளதிகம்.
இக்கட்டுரைத் தொடரை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி.
ரவி நடராஜன் – ravinat@gmail.com
டொரோண்டோ, கனடா
Reviews
There are no reviews yet.