×

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணி, ஹொங்கொங்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘ஷங்ரி-லா’ (Shangri-La) ஹோட்டல் குழுமத்துக்கு வழங்கப்பட்டது.




இந்தக் காணியை வழங்கியபோது, 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அக்காலப் பெறுமதியின்படி, இந்தத் தொகை 100 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.


இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


சிவில் அமைப்புகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முறைப்பாடுகள் மற்றும் முன்னர் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் திரட்டப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இந்த முறைகேடு தொடர்பான தகவல்கள், அப்போதைய ராஜபக்ச ஆட்சியில் வெளிநாட்டு விவகாரங்களைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சஜின் டி வாஸ் குணவர்தன வெளியிட்ட கருத்துகள் மூலம் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், சிங்கப்பூரின் ‘TPL Inter’ நிறுவனத்தின் உரிமையாளரான சிதம்பரம் என்ற வர்த்தகர், 2015 ஒக்டோபர் 28ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் சத்தியக்கடதாசி வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியிருந்தார்.


அப்போதைய நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் குழுவிடம், சிங்கப்பூரில் வைத்து இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டது.

குறித்த வாக்குமூலத்தில், இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இடைத்தரகர்களுக்கான பணம் மற்றும் தரகுக் கொடுப்பனவுகள் பரிமாறப்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.


மேலும், ஷங்ரி-லா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம், இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனமொன்றின் ஊடாகப் பணச் சலவை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அதன் பின்னர், அந்தப் பணம் சட்டபூர்வமான பணமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் உள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115