×

உங்களுடைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு அரச அதிகாரிக்கும் ஒரு சதம் கூட இலஞ்சமாகக் கொடுக்க வேண்டாம் என்று விவசாயத் துறை அமைச்சர் கே.டீ.லால்காந்த பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு அரசியல்வாதிக்கும், பணம், பரிசு என எதையுமே கொடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரச அதிகாரிகளுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குகின்றது. அந்தச் சம்பளம் போதுமானதாக இல்லையென்றால், சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்கும். கடந்த அரசாங்கங்களும் சம்பளத்தை அதிகரித்தன. தற்போதைய அரசாங்கமும் சம்பளத்தை அதிகரிக்கின்றது. அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களும் சம்பளத்தை அதிகரிக்கும்.

எனவே, சேவைகளைப் பெற்றுக் கொள்ள அரச அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இன்னமும் சில இடங்களில் வேலைகளைச் செய்து கொடுக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நிலைமை இருப்பதை நாம் அறிவோம்.

கோப்புக்களை மறைத்து வைத்துக் கொண்டு, ஏதாவது பணம் பெற்ற பின்னரே வேலைகளைச் செய்து கொடுக்கும் சம்பவங்களும் அரிதாகவேனும் இன்னும் நடைபெறுகின்றது. இவ்வாறான செயற்பாடுகள், அரசியல்வாதிகளிடம் இல்லை. சில அரச அதிகாரிகளிடமே காணப்படுகின்றன.

இன்னும் சிறிது காலம் செல்லும் போது இந்த நிலைமை படிப்படியாகச் சீராகும். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் ஓரிருவரைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் போது, இந்தப் பிரச்சினையும் படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இன்னும் ஓரிரு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு எம்மால் முழுமையாகத் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115