அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்போது, வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் காவல்துறையினருடன் மோதியதுடன், வர்த்தக நிலையங்களையும் சூறையாடியுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தது 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
“போராட்டம் நடத்துவதற்கான உரிமை ஓர் அடிப்படை உரிமையாகும். ஆனால், வன்முறையின் மூலம் திட்டமிட்டுக் கூட்டாகக் குழப்பத்தை ஏற்படுத்துவது அந்த உரிமைக்குள் அடங்காது” என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ், மார்செய், லியோன் மற்றும் போர்டோ உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளின் தகவல்களின்படி, பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கை சுமார் 8 இலட்சம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.