×

அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஈராக்கின் மசகு எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார்.

போர் தீவிரமடைவதற்கு முன்னர் ஈராக் நாளொன்றுக்கு சராசரியாக 3.4 மில்லியன் பெரல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியும் ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஈராக் நாளொன்றுக்கு 2.7 மில்லியன் பெரல் எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், அதில் 1.5 மில்லியன் முதல் 1.7 மில்லியன் பேரல் வரையே ஏற்றுமதி செய்ய முடிவதாகவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் ஏற்றுமதிப் பாதைகளை பல்வகைப்படுத்துவதற்கான மாற்று தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியே ஈராக்கிய எண்ணெய்யை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், அவை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஈராக்கில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய தாக்குதல்களால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115