யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.