×
வேலை வாய்ப்பு தேடி கனடா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில், துபாய் ஊடாக எத்தியோப்பியாவுக்கு மூவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று கடந்த மே 27ஆம் திகதி பதிவாகியிருந்தது.

குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்தும் சுமார் 20 மில்லியன் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், நெடுங்கேணிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உரிய இராஜதந்திர அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்

இதற்கமைய, கடந்த ஜூன் 06 ஆம் திகதி எத்தியோப்பிய அதிகாரிகளால் இந்த 3 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தான் பிரஜைகளும், ஒரு எத்தியோப்பியப் பிரஜையும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

மேலும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட இந்த 3 இலங்கை இளைஞர்களும் கடந்த முதலாம் திகதி மீள நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115