×

ஜனநாயக கொங்கோ குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,030ஐ கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிகவும் அதிவேகமாகப் பரவும் தொற்றாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. கொங்கோ சுகாதார அமைச்சகம் மற்றும் ஆப்பிரிக்க நோய்க்கட்டுப்பாடு மையத்தின் தரவுகளின்படி, மே மாதம் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,470-க்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2013-2016 காலக்கட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த மோசமான எபோலா அலையில், 1,000 மரணங்கள் பதிவாக சுமார் 8 மாதங்கள் வரை ஆனது. ஆனால் தற்போதைய அலை, வெறும் 10 வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 1,000 மரணங்களைக் கடந்து அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் 'பண்டிக்புக்யோ' எனப்படும் அரிதான வகையைச் சேர்ந்ததாகும். இந்த குறிப்பிட்ட வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நேரடி மருத்துவ சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கொங்கோவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு தொண்டு நிறுவன ஊழியர்களுக்குத் தொற்று உறுதிப்பட்டு, அவர்கள் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். பிரான்ஸிலும் ஒரு தொற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115