பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.