×

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், மத்திய காசாவில் உள்ள நுசெராத் அகதிகள் முகாமில், முன்னதாக இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஒரு பாலஸ்தீனியரின் இறுதிச் சடங்கின் போது, பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்கியதில், குறைந்தது எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 13 ஆகவும், கடந்த 72 மணி நேரத்தில் 25 ஆகவும் உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.   நுசெராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை ஒரு அறிக்கையில், அல்-பலதா சந்தைப் பகுதியில் பொதுமக்கள் கூடியிருந்ததை இலக்காகக் கொண்ட இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு, எட்டு பேரின் உடல்களைப் பெற்றதாகவும், காயமடைந்த 20 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளது. இறுதி ஊர்வலத்தைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தபோது, அஹ்மத் யாசின் மசூதிக்கு வெளியே கூடியிருந்த பாலஸ்தீனியர்களை அந்த ஆளில்லா விமானம் குறிவைத்ததாக நேரில் கண்ட சாட்சிகள் ஊடகமொன்றிடம் தெரிவித்தன வெள்ளிக்கிழமை முன்னதாக இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட ஒரு பாலஸ்தீனியருக்கான இறுதிச் சடங்கு இது என்று அந்த சாட்சிகள் கூறின. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், பல உடல்களும் காயமடைந்தவர்களும் தரையில் கிடப்பதும், அவர்களின் உடைகளிலும் உடல்களிலும் இரத்தம் படிந்திருப்பதும் காணப்பட்டன. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காசா ஊடக அலுவலகம், கடந்த 72 மணி நேரத்தில் சந்தைகள், இறுதிச் சடங்குகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இஸ்ரேலிய இராணுவம் 25க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாகக் கூறியது. காசாவின் சுகாதார அமைச்சகத்தின்படி, வியாழக்கிழமை நிலவரப்படி, இஸ்ரேலின் போர்நிறுத்த மீறல்களால் 1,127 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டும், 3,643 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115