×
பிளம்பருக்கு அடித்த அதிஷ்டம் : தங்கப்புதையலால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்

ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, 'பிளம்பர்' ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஐரோப்பிய நாடான ஒஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான சொகுசு பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.

அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் ஒருவர், அடித்தளத்தின் சிமெந்து தரையில், அடியில் இருந்து ஒரு கயிறு வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கவனித்தார்.

அந்தக் கயிற்றை அலட்சியம் செய்யாமல் அது எங்கே இருந்து வருகிறது என்பதை அறியும் ஆர்வத்துடன், சிமெந்து தரையை தோண்டத் தொடங்கினார். அப்போது கயிற்றுடன் துருப்பிடித்த ஒரு பழைய இரும்புப் பெட்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பளபளக்கும், 30 கிலோ தங்கக் காசுகள் இருந்தன.  அவை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு முன் மற்றொரு தொழிலாளி; அந்த கயிற்றை பார்த்துள்ளார். ஆனால், அசட்டையாக விட்டுவிட்டார்.

ஒஸ்திரிய நாட்டின் சட்டப்படி புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதில் கிடைக்கும் மதிப்பை கண்டெடுத்த நபரும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பாதியாக பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115