×
பாடசாலையில் குழந்தைகளிடம் தங்க நகை திருடிய பெண்

ஹொரணை - இலிம்பாவில் உள்ள ஒரு குழந்தைகள் பாடசாலையின் மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாகத் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட குறித்த பெண்ணை ஹொரணை தலைமை நீதிபதி லக்மினி விதானகமகே இந்த மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண், கிரிகலாவைச் சேர்ந்த 54 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் குறித்து தெரிய வருகையில், பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய தங்கள் குழந்தைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக ஐந்து பெற்றோர்கள் ஹொரணை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பாடசாலை வளாகத்தில் ஒரு சிறப்புத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்குரிய அந்த பெண் ஊழியர் தங்கியிருந்த பாதுகாப்பு அறை சோதிக்கப்பட்ட போது, அவர் பயன்படுத்திய ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணாமல் போன இரண்டு நகைகளை கண்டுபிடித்துள்ளனர்.பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது, அவர் அவ்வப்போது குழந்தைகளின் கழுத்தில் இருந்து குறித்த நகைகளை கழற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். திருடப்பட்ட ஐந்து நகைகளையும் பல்வேறு அடமான கடைகளில் அடமானம் வைத்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115