×
நன்கொடையாக கிடைத்த பணம்! ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய கணக்கிற்கு, தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்தை எந்தவிதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.


ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,


இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து ஷிரந்தி ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டிருந்த எந்தவொரு அழைப்பினையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்  தவிர்த்ததில்லை.


விசாரணைக்கு அழைக்கப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னிலையாகி அவர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை இலஞ்ச, உழல் விசாரணை ஆணைக்குழுவினர் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு வருகைத் தந்து அவரை கைது செய்துள்ளனர்.

இதன்படி, மிகவும் பொறுப்புடன் எனது கட்சிக்காரரான ஷிரந்தி ராஜபக்சவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்த நான் விரும்புகின்றேன்.


தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து 10 மில்லியன் ரூபா பணம் சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதனை ஷிரந்தி ராஜபக்ச எந்தவிதத்திலும் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை.


இந்தப் பணம் புற்றுநோய் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்காக ஸ்கேனிங் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பெறப்பட்ட நிதியாகும்.


தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து இந்தப் பணம் நன்கொடையாகவே வழங்கப்பட்டிருந்தது. ஆனால்,  நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் எப்படி மீண்டும் அரச சொத்தாக மாறியது என்ற கேள்வி இங்கு எழுகின்றது.


மேலும், அரச நிதியை திருடியது மற்றும் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டையும் எமது தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.


ஷிரந்தி ராஜபக்ச எந்தவொரு அரச நிதியையும் மோசடி செய்யவோ அல்லது குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தவோ இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115