மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனையை சேர்ந்த 26 வயதுடைய கர்ப்பிணி பெண்ணே வியாழக்கிழமை இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த வருடம், மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயால் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவாகும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். மட்டு. போதனா வைத்தியசாலையில் நேற்று , இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்திய பணிப்பாளர் கலாரஞ்சினி இதனை குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை - பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான குறித்த பெண், கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், பரிசோதனையில் அவருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு, 18ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, வைத்திய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் 21ஆம் திகதி சுக பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதற்கு பின்னர் அவருக்கு தொடர்ந்து, இரத்த போக்கு ஏற்பட்டதனால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.