×

கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வலியுறுத்தி தற்போதைக்கு புத்த சாசன அமைச்சை முற்றுகையிட்டுள்ள பிக்குமார், இரவை அங்கேயே கழிக்க உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


நேற்று  காலை ஜனாதிபதி அலுவலகம் அருகில் நடைபெற்ற பிக்குமாரின் சத்தியாக்கிரக எதிர்ப்பு நடவடிக்கைக்கு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தது.


அதனையடுத்து கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க பிக்குமார் பேரணியாகத் திரண்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கி புறப்பட்டிருந்தனர்.


எனினும் சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர்கள் முன்வைத்த நகர்வு மனு நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.


அதனையடுத்து இடைவழியில் தங்கள் பயணத்தை திசைமாற்றிய பிக்குமார் தற்போது புத்தசாசன அமைச்சை முற்றுகையிட்டு பலவந்தமாக அங்கு தங்கியுள்ளனர்.


பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளரைச் சந்தித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அவ்விடத்திலிருந்து நகரப் போவதில்லை என்றும் பிக்குமார் அறிவித்துள்ளனர்.


அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமாருக்கு உணவு மற்றும் குளிருக்குப் பொருத்தமான ஆடைகளை அன்பளிப்புச் செய்யுமாறும் அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115