கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரது துறவிக்குரிய காவி உடை (சீவரம்) அகற்றப்பட்டு, சாதாரண உடை அணியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டமை ஒரு பாரதூரமான செயல் என அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வணக்கத்திற்குரிய மெடகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் (07) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் எதிர்கொண்டுள்ள நிலைமை குறித்து மகா சங்கத்தினர் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள். வணக்கத்திற்குரிய ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
இருப்பினும், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை ஆராயும்போது, சிறைவாசத்திற்குப் பிறகு மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது அவரது துறவிக்குரிய ஆடைகள் அகற்றப்பட்டு சாதாரண உடையில் முன்னிலைப்படுத்தப்பட்டமை சட்ட மீறலாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின்படி, அவர் தனது வழக்கமான ஆடையிலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் தீவிரமான ஒரு விடயமாகும்.
நமது சட்ட அமைப்பு பாரம்பரியமாக மதகுருமார்களின் அந்தஸ்தை அங்கீகரிக்கிறது; ஆனால், அந்த அடிப்படைக் கொள்கையை அலட்சியம் செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 'சாசனத்திற்கு' (பௌத்த மதக் கட்டமைப்புக்கு) ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைகிறது.
மகா சங்கமாகிய நாங்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம். அரசியல் கண்ணோட்டங்களால் பாதிக்கப்படாமல் இவ்விடயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சாசனத்தின் கண்ணோட்டத்தில் இது ஒரு பாரதூரமான மீறலாகும். ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நாங்கள் கலந்துரையாடுவோம்; தேவைப்பட்டால், அவரை மீண்டும் துறவறத்தில் இணைக்கும் (மீண்டும் உபசம்பதா செய்யும்) செயல்முறைக்கு உதவவும் நாங்கள் தலையிடுவோம்.
குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ரோமன்-டச்சுச் சட்டம் கூறினாலும், தவறு செய்தவரை மன்னித்து அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்றே பௌத்தம் போதிக்கிறது. மகா சங்கமாகிய நாங்கள் இவ்விடயம் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். சாசனத்தின் கண்ணோட்டத்தில் இது ஒரு பாரதூரமான மீறலாகும் என அவர் கூறியுள்ளார்.
000000000000000000
அமெரிக்க கடற்படையின் “யுஎஸ்எஸ் துல்சா (LCS 16)” போர்க்கப்பல் நேற்று (07.10.2026) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். “கடலோரப் போர்” (Littoral Combat Ship) வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் 127.7 மீற்றர் நீளமுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலின் தளபதியாக பி.எம். வானியர் செயற்படுகின்றார். 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி அமெரிக்க கடற்படையில் இணைக்கப்பட்ட “யுஎஸ்எஸ் துல்சா (LCS 16)” கப்பல், அன்று முதல் அமெரிக்க கடற்படையில் சேவையாற்றி வருகின்றது.
இந்த நிலையில், குறித்த கப்பல் இதற்கு முன்னரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.