சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது.
அந்த உரையாடலில், தாம் தற்போது இரண்டு ஓய்வூதியங்களைப் பெற்றுவருவதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதில் ஒன்று இராணுவ சேவைக்கான ஓய்வூதியமும், மற்றொன்று முன்னாள் ஜனாதிபதிக்கான ஓய்வூதியமும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரையாடலின்போது, இராணுவத்தில் 20 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னரே ஓய்வு பெற்றதாகவும், மருத்துவ விடுப்பின் அடிப்படையில் சேவையிலிருந்து விலகியதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் என்றும் அவர் மறுத்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கான ஓய்வூதியத்தையும் பெறுவதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, பொதுமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் இந்த ஓய்வூதியத்திற்கு தாம் தகுதியானவரா என சமூக செயற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, "அது எனக்குத் தெரியாது. அதை நீங்கள் தீர்மானியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தாமே காரணம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்து, "நான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை. அரகலய போராட்டங்களே அதற்குக் காரணம்" என கூறியுள்ளார்.
உரையாடலின் இறுதியில், 20 ஆண்டுகள் இராணுவத்தில் கடுமையாக பணியாற்றி பெற்ற ஓய்வூதியம் என்பதால் அதுகுறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் எனவும், தம்மை தொடர்ந்து தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஒலிப்பதிவின் உண்மைத்தன்மை தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், குறித்த உரையாடல் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.