கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கலாம் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது
இந்தக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை பொதுமக்கள் தங்களின் ஆணையின் ஊடாக எமக்கு தந்துள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 58 பாரிய குற்றவாளிகளை கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளோம். அவர்கள் அந்த நாடுகளில் பெரிய மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். சொகுசு வாகனங்கள் அவர்களிடம் உண்டு.
கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அங்கு சென்ற பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றவாளிகளுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்தனர்.
எமது நாட்டில் சட்டம் மிகவும் சீர்குலைந்த நிலையில் இருந்தது. ஒரு அரசியல் தரப்பை மாத்திரம் அல்ல இது போன்ற பல அரசியல் குழுக்களை நாங்கள் அகற்றியுள்ளோம். அவர்களுள் பலர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தார்கள்.
அழிவடைந்த நிலையில் இருந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது நிதி ரீதியக ஓரளவு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.
அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சேகரித்து நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
00000000000000
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டமானது இன்று( 25.08.2026) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடு வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.