×

இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்களால் கடல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாரிய பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கண்ணாடி இழை படகுகளில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடி படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மனிதாபிமானமற்ற முறையில் கடல் வளங்களை சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களை சேதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

“கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, கடலில் வாழ்வாதாரம் மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


00000000000000000

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கட்டுப்பாடின்றி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதி முழுவதும் குப்பைகள் சூழ்ந்த பகுதியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் பிரதேச பிரதிநிதிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அண்மைய பகுதிகளில் நீண்டகாலமாக பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலை செல்லும் வீதியில் காணப்படும் பாரிய குழிகள், கடந்த காலங்களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்காக சுண்ணக்கற்கள் அகழப்பட்டதால் உருவானவை என கூறப்படுகிறது.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலையால் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, அந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக அந்த பகுதிகள் மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன் பின்னர், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் காணியற்ற மக்களும் "நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" திட்டத்தின் கீழ் அந்தப் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள், அப்பகுதியில் உள்ள பாரிய குழிகளுக்குள் கழிவுகள் கொட்டப்படத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட உக்காத கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், பின்னர் இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கூட எந்தவித கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இன்றி கொட்டப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தென் கொரியாவின் நிதி உதவியுடன் "சுகாதார நில நிரவுகை திட்டம்" மூலம் அந்தக் குழிகள் நிரப்பப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அனுமதியின்றி எவரும் அப்பகுதிக்குள் நுழைய முடியாத வகையில் நிரந்தர வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் இப்பகுதியில் கழிவுகள் கொட்ட அனுமதிக்கப்பட்டால், "நல்லிணக்கபுரம்" மக்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, எதிர்கால முதலீட்டு திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நீண்டகால திட்டமிடலுடன் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதிகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115