×

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழிலாளர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்  இன்று(18) சனிக்கிழமை வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில் மக்களை கருவறுக்கும் செயற்பாடாக பார்க்கிறோம். இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது. ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர் பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள நினைக்கிறார்கள். எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது. அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என கேட்க விரும்புகிறோம்.

ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தின் பாரம்பரிய கடற்தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.  கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.  

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115