×

மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்க தவறிய வீணடித்த அந்த இரு திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்ற பிரிவு, மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஈ.பி.டி.பி.கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று(24.08.2026) பாலமீன்மடு காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக (IFAD) சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் அமைப்பின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 9 மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு, தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் 7 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் செயலிழந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, காத்தான்குடி, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், பாலமுனை ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 4 எரிபொருள் நிலையங்களும் செயலிழந்துள்ளதுடன், அதில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் கட்டிட கதவுகள் உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளது.

இவ்வாறு செயலிழந்த நிலையில் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக, அப்போது முதல் தற்போது வரை கல்முனை பிராந்திய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளராக இருந்தவர், இது குறித்து திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.

இதன் மூலம் தனது கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியதுடன், பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் அவர் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மீனவர் சங்கங்களிடம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் தலா 30,000 ரூபாய் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து 10,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கி வருகின்றது என்றார்.  


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115