சில உயர் அதிகாரிகளிடம், வாக்குமூலம் பெறும் போது, அந்த இடத்திற்குச் சென்று “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை வரும்” என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் அதிகாரிகளுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், அவர்கள் தொடர்ந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். கேகாலை பகுதியில் நேற்றையதினம்(18.07.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் நாட்டில் பல உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிரை தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கும் அதிகாரிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டு வருகின்றது. சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறும் இடங்களில் வைத்தே, “நீங்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும்” என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அரசாங்கம், மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடலாம் என நினைத்தால் அது தவறான எண்ணமாகும். இதற்கெதிராக நாங்கள் அணித் திரள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.