அண்மைக்காலமாக இலங்கையில் இணைய மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அவ்வாறான இணைய மோசடிகள் அதிகரிப்பு காரணமாக அண்மைக்காலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையில், ஆசியாவைச் சேர்ந்த மோசடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் ஊடுருவியுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து (உதாரணமாக கம்போடியா) தப்பி வரும் ஆயிரக்கணக்கான மோசடி கும்பல் உறுப்பினர்களுக்கு, இலங்கை ஒரு விருப்பமான இடமாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கம்போடியா போன்ற நாடுகளில், கடத்தப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் மிகப்பெரிய மோசடி மையங்கள் செயல்பட்டு வந்தன.
சமீபகாலமாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இத்தகைய மோசடி மையங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், சீன வம்சாவளியைச் சேர்ந்த மோசடிக் கும்பல்கள், மடகாஸ்கர் முதல் பபுவா நியூ கினியா வரையிலான பலவீனமான நிர்வாகம் கொண்ட நாடுகளுக்குத் தங்கள் செயல்பாடுகளை மாற்றியுள்ளன.
தெற்காசிய நாடுகளில், இலங்கை ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. 'தொழில்துறை அளவில் இணைய மோசடிகள் நடக்கும் மையமாக இலங்கை மாறுவதற்கு அதிக அபாயம் உள்ளது' என்று 'குளோபல் இனிஷியேட்டிவ் அகைன்ஸ்ட் டிரான்ஸ்நேஷனல் ஓர்கனைஸ்ட் கிரைம்' (GI-TOC) அமைப்பு கடந்த மாதம் எச்சரித்திருந்தது.
ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இலங்கை பொலிசார் நாடு முழுவதும் 27 சந்தேகத்திற்கிடமான மோசடி மையங்களில் சோதனைகளை நடத்தி, 1,093 பேரை கைது செய்துள்ளதாக, இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஃப்ரெட்ரிக் வூட்லர், 'ஓர்கனைஸ்ட் கிரைம் அண்ட் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட்' (OCCRP) மற்றும் 'ஆங்கில ஊடகமொன்றுக்கும் தெரிவித்துள்ளார்.