×
இலங்கைக்கு அருகில் தாழ் அமுக்க மண்டலம் - கனமழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு அருகில் காணப்படும் தாழ் அமுக்க மண்டலம் தற்போது நாட்டின் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று வானிலை அவதானிப்பு நிலையத்தின் கணிப்பீட்டுப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதுடன், பல மாகாணங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

குறிப்பாக, மாலையிலோ அல்லது இரவிலோ நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும் சாத்தியம் உள்ளது.


இதில் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த கனமழை பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இத்தகைய வானிலை மாற்றங்கள் காரணமாகப் பொதுமக்கள் அனைவரும் இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


இந்த வளிமண்டலவியல் முறைமையின் தாக்கம் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாளையும் இந்த நிலை தொடரக்கூடும் என்று மெரில் மெண்டிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்பிரதேசங்களைப் பொறுத்தவரை, மேற்கு, தெற்கு மற்றும் வடக்குக் கடல் பகுதிகளிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மேலும், இலங்கையை அண்மித்த பகுதிகளில் அயன அயல் இணைப்பு வலயம் தீவிரமடைந்துள்ளதால், எதிர்கால வானிலை அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதானிப்பு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.


×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115