×

அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை அமைப்பின் முதற்கட்டச் சோதனை நேற்று (27) மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது.


இதன் போது நாட்டின் பெரும்பான்மையான தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் டெப்ளட்களில் பலத்த சைரன் ஒலியுடன் கூடிய சோதனைச் செய்தி தோன்றியது.


காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது சுகாதார அவசர நிலைகளின் போது மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க இந்த புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குறுஞ்செய்தி முறையைப் போலன்றி, தொலைபேசி டவர்கள் மூலமாக நேரடியாகச் சாதனங்களுக்கு இந்த எச்சரிக்கை ஒளிபரப்பப்படும்.


போன் 'Do Not Disturb' அல்லது 'Silent'  இல் இருந்தாலும், சுமார் 10 வினாடிகளுக்கு உரத்த சைரன் ஒலிக்கும். மாநிலங்களுக்கு ஏற்ப மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது.


இது ஒரு சோதனையே என்பதால் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை, திரையில் தோன்றும் செய்தியைப் படித்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.


குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு இரகசியமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள், சைரன் ஒலியால் போன் இருப்பது வெளிப்படாமல் இருக்க சோதனை நேரத்திற்கு முன்னதாகவே போனை அணைத்து வைக்குமாறு அல்லது 'Airplane Mode'-க்கு மாற்றுமாறு தேசிய அவசர முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115