×

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடி வரும் வலி. வடக்கு - பலாலி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கிறங்கியுள்ளனர்.குறித்த பகுதி மக்கள் இன்று(16.08.2026) வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி இருந்தனர்.உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தமது பூர்வீக நிலங்கள் இதுவரை முழுமையாக மீள வழங்கப்படவில்லை என தெரிவித்து, பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், இன்று 9ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த வாரம் அறிவித்திருந்தபடி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கு இறங்கியுள்ளனர்.பலாலி - செபஸ்தியர் ஆலயம் அமைந்துள்ள பகுதியிலிருந்து கறுப்பு உடையணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பலாலி சந்தியை சென்றடைந்துள்ளனர். அங்கு வீதிச் சோதனை சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடி, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.இதன்போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போராட்டக் களத்தில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், போராட்டக்காரர்கள் அமைதியை கடைப்பிடித்து தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதுடன், வழமையான நேரம் வரை போராட்டக் களத்தில் நிலைத்திருந்தனர்.

பல ஆண்டுகளாக அமைதிவழியில் போராடி வரும் பலாலி மக்களின் போராட்ட வடிவம் தற்போது படிப்படியாக மாறி வருகின்றது. தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

×

Contact Info

For more info email to scsdo15@gmail.com or Whatsapp +1 510 838 9115