
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணில் கழுத்திலிருந்த சுமார் பத்தரை (10 ½) பவுண் தாலிக் கொடி களவு போயுள்ளது. இந்த சம்பவம் அக்கரைப்பற்று 7-4 பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
அதோடு பெண்ணின் கணவரின் மணிபேர்ஸ்சையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடன், முன்கதவை உள்ளிருந்து திறந்து வைத்துள்ளார்.
அதன் பின்னர் மிகவும் சூட்சுமமான முறையில் கொடியை அறுத்தெடுத்து தப்பிச் சென்றுள்ளான். தாலி தன்கழுத்தில் இருந்து கழன்று செல்வதை உணர்ந்த அப்பெண் சத்தமிட்டு கணவரையும் எழுப்பிய போதும், ஏற்கனவே திறந்து வைத்திருந்த முன் கதவின் வழியாக, கள்வன் ஓடி சென்றதாக பொலிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மற்றும் அம்பாறை விசேட தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேநேரம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலையடிவேம்பில் உள்ள வீடொன்றிலும் இதே பாணியில் பெண்ணொருவரின் தாலிக் கொடி அறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடரும் கொள்ளைச் சம்பவத்தால் பிரதேச மக்கள் பீதியில் உள்ளனர்.