
தமித் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிறக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட நிலையில் அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் அது மீளவும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதன்போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாதீட்டுக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜனபெரமுன, ஜக்கியதேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, தமிழ் தேசியமக்கள் முண்ணனி, சுஜேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களும் ஐக்கியதேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்திருந்தனர்.
இதனால் 9 மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான சபையின் பாதீடு இரண்டாவது முறையாகவும் பெரும்பாண்மை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.
இந்நிலையில் உள்ளூராட்சி சட்டங்களின்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.