தமிழக எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் , நேற்றிரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் , “பொய் வழக்கில் கைது செய்த எங்களை அந்த வழக்கின் தண்டனை காலம் முடிந்தும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சிறப்பு முகாமிலேயே பல ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதனால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியிலான உதவியும் மறுக்கப்படுகிறது. அதோடு , தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் எங்களை விடுதலை செய்து குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும்” எனக்கோரி, உண்ணாவிரதம், காத்திருப்பு என பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மாதம் இவர்களைச் சந்தித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மறுவாழ்வு திட்ட ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமையிலான குழுவினர், விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் வந்த படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் சென்றபோது படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தநிலையில், விசாரணை நடைபெற்று தற்போது அந்த பத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 70 இலங்கைத் தமிழர்களும் தமிழக அரசின் மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் கொண்ட குழு அளித்த உறுதிமொழியை நம்பி, விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையோடு அங்கு காத்திருக்கின்றனர்.

