
காய்கறிக்கடை ஒன்றில்…. நடந்த உரையாடல்….
“கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!
“அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான்” என்றேன்..
அவள் முறைப்புக்கு இடையே
“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…
“ம்…இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை “
எனச் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது.
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே…
“முத்தம் தரும் காய் உண்டோ…?”
என்றேன்…
“என்ன என்ன” என்று அதட்டினாள்…
“முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்”
என்றேன்…
“வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா? ” என்றாள்.
“ஐயய்யோ அப்படியென்ன காய்?” என்றேன்.
“கத்தரிக்காய்” என்றாள்.
“மழைபொழியும் காயுண்டோ?”
என்று மடக்கினேன்.
“புரியவில்லை” என்றாள்.
“காரம் (கார் அம்) பொழியும் காய்” என்றேன்.
“ஓ.. அடையெடுத்த பெயரோடு
அதைத் தடுக்கும் காயாக வந்துள்ளது” என்றாள்.
இப்போது நான் விழித்தேன்.
“ஆமாம், குடை மிளகாய்” என்றாள்.
“இப்படித்தான் போனவாரம்
தித்திக்கப் பேசித் தேன்காய் என்று தேங்காய் விற்றாய். வீட்டில் சென்று உடைத்துப் பார்த்தேன், ஒரே வழுக்கை” என்றேன்..
“இல்லை இல்லை குடுமியோடுதான் தந்தேன்
பொய்சொல்லாதீர்” என்றாள்.
“ஆசையொடு ஆயிரங்காய் தின்றாலும் மூக்கின் கீழ் மீசை வைத்த காயுண்டே, விலையென்ன?” என்றேன்.
சிறிதுநேர யோசனைக்குப்பின்
சிறு காயப் படுத்தும் சிரிப்போடு…
“வெங்காயமா…? விலை நூறு” என்றாள்.
விலையைக் கேட்டுப் பெருங்காயப் பட்டுப்போனேன்.
“உன் உள்ளக்காய் போலும்
உள்ளே ஒளித்துவைக்கும்..
அந்தக் காய் கிடைக்குமோ?” என்றேன்.
“ஏய்…என்னது?” என்றாள்.
“அட, கள்ளக்காயைக் (கடலைக்காய்) கேட்டேன்” என்றேன்.
“அதான..” எனச் சிரித்தாள்.
“இனிக்கும் காயேதும்
உண்டா?” என்றேன்.
“சுண்டைக்காயும், பாகற்காயும் உள்ளது” என்றாள்.
“ஆமாமாம், நீ கையோடு அள்ளித் தந்தால் இனிக்காமல் என்ன செய்யும்?” என்றேன்.
“தக்காளி என்ன உன்னைப் போலவே அரைவெட்டாக இருக்கிறதே?” என்றேன்.
கண்கள் சிவக்க அவள்
காளியாவதைக் கவனித்தேன்.
“சண்டையை முடித்துக் கொள்வோம், காயா பழமா?” என்றேன்.
“பழம்” என்றாள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாகக்
கனிந்து கொண்டிருந்தேன்…