
சமீபத்தில் நான் என்னுடைய அம்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.
மருத்துவமனையில் என் அம்மாவைப் பரிசோதித்த டாக்டர் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டுமென்று சொன்னதால் அங்கு அருகிலிருந்த கழிப்பிடத்திற்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.
கழிப்பிடத்திலிருந்து என்னை ஏமாற்றி விடாதீர்கள், உங்களைத்தான் நம்பியிருக்கிறேன், என்னைக் கை விட்டுவிடாதீர்கள் என்று ஒரு இளம் பெண்ணின் பேச்சுக்கள் வந்து கொண்டிருந்தது.
ஒருவர் இருக்கும் கழிப்பிடத்திலிருந்து ஏதோ ஒரு ஆணால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் சப்தம் மட்டும் வருகிறதே… அப்படியானால் உள்ளே அந்தப் பெண்ணுடன் இன்னும் ஒரு ஆண் இருக்க வேண்டும்.
அந்த ஆணிடம் வாழ்க்கையைத் தொலைத்த பெண் வாழ்க்கையைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறாளோ என்று எனக்குள் கற்பனை எட்டிப் பார்த்த போது அந்த கழிப்பிடத்தின் கதவு திறக்கப்பட்டது.
கையில் மொபைல் போனுடன் ஒரு பெண் மட்டும் வெளியில் வந்தாள். அந்தப்பெண் இதுவரை மொபைல் போனில்தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள்.
அட, போன் பேச கழிப்பிடத்தையா உபயோகிக்க வேண்டும்.
இன்று மொபைல் போன் வந்தாலும் வந்தது. இது போன்ற கிறுக்குத்தனங்களுடன் மொபைல் போன்கள் படாதபாடு படுகிறது.
இந்த மொபைல் போன்களில் நடந்து கொண்டே பேசுவது, வாகனத்தை ஓட்டிக் கொண்டே பேசுவது போன்றவை ஆபத்தானது என்று தெரிந்தாலும் விடாமல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.