
உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.
மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாகவும் சுயம் என்பதைக் கொண்டதாகவும் வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திராததாகவும் இருக்கும் மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.
இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.
தமிழை “”உயர்தனிச் செம்மொழி” என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். “தமிழ்’ என்பதற்கு “அழகு’ எனவும் பொருள் உண்டு.
அவ்வகையில், இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ் மொழி. தமிழ் மொழியானது தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கின்றனர் மூத்தோர்.
தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப்பையிலிருந்து குறைந்த காற்றே வெளியேறுகிறது. உலகிலுள்ள பல மொழிகள், பேசும் போது அதிகமான காற்று வெளியேற்ற கூடிய வகையில் அமைந்துள்ளன. பேசும் போது அதிகமான காற்று வெளியேறி செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலாளர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், நம் வாழ்நாளில் அதிக சுவாசக்காற்றை வெளியேற்றாமல் இருந்தோமனால் நீண்டநாள் வாழலாம் என்று ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே தமிழ் மொழியைப் பேசினால் சுவாசக்காற்றை மிச்சப்படுத்தி நீண்டநாள் வாழலாம் என்பது எழுதப்படாத உண்மை!
அடுத்து, தமிழின் சிறப்புகளை எடுத்துரைக்கையில், திருக்குறளை விட்டுவைக்க முடியாது. இன்று உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்றால் அது மிகையாகாது. ஆறறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியினை திருவள்ளுவர் இதில் திட்டவட்டமாக வரையறை செய்துள்ளார்..
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.
ஒரு விடயத்திற்கு ஆயிரம் பெயா் உள்ள சிறப்பு தமிழில் மட்டுமே உண்டு. அது தமிழின் பலம் எனலாம்.
இவையெல்லாம் ஒன்றை உணா்த்துகின்றது. தமிழ் மொழியைப்போல உலகில் ஒன்றுமில்லை. அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட நாம் பெருமையும் மகிழ்வும் கொள்ளுதல் தவறன்று. எமது மொழியை நேசிப்போம். எமது மொழியைச் சுவாசிப்போம். உலகிற்கு உரத்துச் சொல்லுவோம், நாம் தமிழரென்று.